தேர்வு எழுத அனுமதி கோரி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் பல்லாவரம் அடுத்த ராயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரின் மகள் காமாட்சி. வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்த போது இவருக்கு திருமணம் நடைபெற்றது. காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று நினைத்த காமாட்சி குழந்தை பிறந்த ஒரு மாத காலத்தில் கல்லூரிக்கு வந்தார். இதைக்கண்ட பேராசிரியர்கள் பச்சிளம் குழந்தையை கல்லூரிக்கு கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தி விடுப்பு எடுத்துக் கொள்ளும்படி கூறப்பட்டது.
இந்நிலையில் இறுதியாண்டு தேர்வு எழுத கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணம் கட்டியதாக கூறப்படுகிறது . இருப்பினும்இறுதி ஆண்டுதேர்வுக்கு முந்தைய தேர்வான திருப்புதல்தேர்வில் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு இறுதியாண்டு தேர்வுக்காக கட்டப்பட்ட கட்டண தொகையை பேராசிரியர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டு, இறுதியாண்டு தேர்வு எழுத முடியாது எனவும் வருகை பதிவேட்டில் குறைபாடு உள்ளதாக கூறி அவரை வெளியில் அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தன்னை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பேராசிரியர்கள் அவரை சமாதானப்படுத்திய போதும், அவர் ஏற்காத நிலையில் பிறகு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் காமாட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உறுதி அளித்த பின் அவர் அங்கிருந்து சென்றார்.