தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவில் எட்வர்ட் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு நிவேத்(19) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேத் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையில் இருந்து தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நிவேத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.