ரெப்போ வட்டி விகிதம் 4.90 ஆக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார்.
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையிலே அடுத்த கட்ட நடவடிக்கையாக இப்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவித்துள்ளார். அதாவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. எனவே வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ரிசர்வ் வங்கியின் முக்கிய ஆலோசனைக் குழு மும்பையில் ஆலோசனை நடத்தி அதனடிப்படையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை தொடர்ந்து வங்கிகளும் அவர்களுடைய வட்டி விகிதங்களை அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டு கடன் அல்லது வாகனங்களுக்கான கடன் அல்லது வேறு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான கடன் வட்டி விகிதங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, உக்ரைனில் நடந்த போரில் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது, அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.