விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள ஆரோவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையராக மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் தூய்மை பணி மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்ச்சி நிறைவு விழா ஆரோவில் பாரத் நிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி சுத்தமான புதுச்சேரியாக அமைய வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு ஒரு வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் எங்கு குப்பைகள் உள்ளது என புகைப்படம் எடுத்து அனுப்பினால், அந்த குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மருந்து தட்டுப்பாடு உள்ளது என்றும் அதனை களைய நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் சென்னை-புதுச்சேரி வரை செல்லும் சொகுசு கப்பல் சேவையான கப்பல் புதுச்சேரி கடல் பரப்பிற்கு வரும் போது கேசினோ சூதாட்டம் இல்லை என்பதை உறுதி செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.