மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மேலவீதி பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், விஜய் என்ற மகனும், நந்தினி, ரோஜா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர் சின்னசாமி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்தோடு தங்கியுள்ளனர். இந்நிலையில் முருகேசனின் 2-வது மகளான ரோஜா ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளார். இவரை தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இவர் ரோஜாவிடம் தன்னை காதலிக்குமாறு கூறி பலமுறை கட்டாயப் படுத்தியுள்ளார்.
ஆனால் ரோஜா சாமிதுரையை காதலிக்க முடியாது எனக் கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் உறவினர்களுக்கு தெரிய வரவே அவர்கள் இருதரப்பு குடும்பத்தினரையும் அழைத்து பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை முருகேசனின் வீட்டை பலநாள் நோட்டு மிட்டுள்ளார். அதன்பிறகு ஒருநாள் ரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட சாமிதுரை அவரின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தன்னை காதலிக்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு ரோஜா மறுக்கவே சாமிதுரை ரோஜாவின் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.
இதை தடுக்க வந்த ரோஜாவின் குடும்பத்தினரையும் சாமிதுரை கொடூரமான முறையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் குடும்பத்தினர் ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ரோஜாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆத்தூர் டி.எஸ்.பி ரோஜா கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.