Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டல்…. விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை…. பரபரப்பு…!!!!

போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகில் மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையில் வசித்து வரும் முருகன் என்பவருடைய மகன் 27 வயதுடைய செல்வகுமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 1-ஆம் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே கடலூர் புதுநகர் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப செலவிற்காக செல்வகுமார் ஒரு பெண்ணிடம் ரூ 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை செல்வகுமார் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் அந்தப் பெண் மீண்டும் பணத்தை கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த செல்வகுமார் விஷம் குடித்து விட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் போது மயங்கி விழுந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து கடலூர் மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமன் அரசு மருத்துவமனைக்கு சென்று செல்வகுமார் இடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.

இதற்கிடையே செல்வகுமார் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, என்னுடைய கடைசி மகன் செல்வக்குமார் கடந்த நான்கு வருடங்களாக போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் பக்கத்து ஊரான பெரிய நெல்லிக்கொல்லையில் வசித்த கிருஷ்ண மூர்த்தியின் மனைவி அனிதா(35) என்பவரிடம் கடந்த வருடம் ஜனவரி மாதம் ரூ 5 லட்சம் கடனாக வாங்கி அதற்கு சான்றாக 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன் அசல், வட்டியுடன் அனிதாவுடன் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் செல்வகுமார் கையெழுத்துப் போட்ட பாத்திரத்தில் ரூ 12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அனிதா எழுதி உள்ளார். அவர் பன்னிரண்டு லட்சத்தைத் கொடுத்துவிடு. இல்லையெனில் இந்த பாத்திரத்தை வைத்து உன்னுடைய வேலையை காலி செய்து விடுவேன் என்று அனிதா மிரட்டி வந்துள்ளார்.

இதனால் தன்னுடைய வேலை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மன அழுத்தத்தில் விஷம் கொடுத்து செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே கந்து வட்டி கேட்டு மிரட்டிய அனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாகவும், கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக அனிதா மீது கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |