புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 5 தினங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த பயிற்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் பயிற்சி மையத்தினை பார்வையிட்டு பயிற்சி முக்கியத்துவத்தை குறித்து விளக்கி பேசியுள்ளார்.
அதன்பின் அவர் பேசியதாவது, கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் கற்றலில் பின்தங்கி உள்ளார்கள். எனவே ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் எழுத்தறிவையும், எண்ணறிவையும் 2025 -ஆம் கல்வியாண்டில் பெற்றிருக்க வேண்டும் என்று தொலைநோக்கில் தமிழக அரசினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் குறிக்கோள் நிறைவேறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 இடங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி ஐந்து தினங்கள் நடைபெற்று வருகின்றது.
அதில் மாவட்டம் முழுவதும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 2000 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார்கள் என்று கூறினார். இந்த ஆய்வின்போது பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வராஜ், கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர்கள் துரையரசன், துரைராசு மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
இதேபோன்று விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவலிங்கம் மற்றும் வட்டார கல்வி அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் அறிவையும், உணர்வையும் கொடுக்கின்ற வகையில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்லுகின்ற போது கற்றல், கற்பித்தல் துணைக்கருவிகளுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளித்துள்ளனர். மேலும் இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் பங்கேற்று பயிற்சி முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். இதற்கு முன் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்று பேசினார்.
இதை தொடர்ந்து அன்னவாசல் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி, மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பங்கேற்று அன்னவாசல் வட்டாரம் முழுவதும் பணியாற்றுகின்ற ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த பயிற்சி ஐந்து தினங்கள் நடைபெற இருக்கின்றது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் ஜோசப் ரொசாரியோ மற்றும் ஆசிரியர் டேவிட் சரவணன் ஆகியோர் செய்திருந்தார்கள்.