Categories
உலக செய்திகள்

குட் நியூஸ்…. உலக அளவில் குறைந்து வரும் தொற்று…. அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

உலகளவில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையின்படி, உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதியதாக கொரோனா நோய் தொற்றின் பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது என தெரியவந்துள்ளது. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 % குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 % குறைந்து ஏறக்குறைய 7,600 ஆகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் கூறியதாவது, “கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா நோய் தொற்று தற்போது தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகின்றது. இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு செயலாகும். இருப்பினும், இந்த தொற்று நோய் இன்னும் முடிவடையவில்லை. பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு, கொரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் பணக்கார நாடுகளில் முதன் முதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி 18 மாதங்களைக் கடந்து, தேவைகள் குறைந்து போதிய அளவு தடுப்பூசிகள் உள்ள நிலையில், இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

இந்த தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். மேலும் ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்” என்று அவர்  கூறியுள்ளார். மத்திய கிழக்கில் புதிய வாராந்திர கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 19 % உயர்ந்துள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசியாவில் 1 % அதிகரித்துள்ளது. பிற பகுதிகளில் கொரோனா நோய் தொற்று வீழ்ச்சியடைந்துள்ளது. மேற்கு பசிபிக் பகுதியில் இறப்பு எண்ணிக்கை 7 % அதிகரித்துள்ளது.

Categories

Tech |