கேரளாவில் கொரோன வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நலம் சீராக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது
“கொரோன வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. ஆனால் அந்த மாணவியிடம் தீவிர அறிகுறிகள் தென்படவில்லை. மாணவியின் உடல் நலம் சீராக தான் இருக்கிறது”
ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க பட்டுள்ளதா என்னும் கேள்விக்கு ” கொரோன வைரஸ் பாதிப்பை குணப்படுத்த மருந்துகள் எதுவும் கிடையாது. மற்ற வைரஸ் பாதிப்புகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை போலவே அந்த மாணவிக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது என பதிலளித்தார்.
இந்தியாவில் முதலில் பாதிக்க பட்டது கேரளா இதற்காக மத்திய அரசிடம் உதவி கேட்டீர்களா என்னும் கேள்விக்கு “மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பின் போது நாங்கள் கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்தி விட்டோம். அதனால் தான் பாதிக்கப்பட்ட மாணவியின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு கொரோன பாதிப்பு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது” என்று கூறினார்.
கொரோன வைரஸ் பரவாமல் தடுக்க வேறு என்ன ஏற்பாடுகள் செய்துள்ளனர் எனும் கேள்விக்கு “மாநில அளவில் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களில் பொதுமக்கள் தங்கள் உடல்நலம் குறித்து பதிவு செய்து வருகின்றனர். கொரோன பாதிப்பு குறித்து கவனமாக கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டே நாட்களில் செவிலியர்கள் முதல் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.