திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியையடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சரசு. இவர் தனது 2 வயது குழந்தையுடன் கடந்த 26 ஆம் தேதி அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பர்தா அணிந்து வந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தையுடன் பேச்சு கொடுத்தவாறே அதனை தூக்கி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் கண்டோல்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த அதிகாரிகள் திருச்சி ரயில் நிலையம் வழியாக குழந்தையை தம்பதியினர் தூக்கிச் செல்வதைப் பார்த்தனர். இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உடனடியாக விசாரிக்க கோரி அறிவுறுத்தினர்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட தமிழக காவல்துறை கோவையில் சந்தேகத்திற்கிடமாக குழந்தையுடன் சுற்றிக்கொண்டிருந்த தம்பதியினரை பிடித்து விசாரித்ததில் அந்த குழந்தை திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி கண்டோல்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட அங்கு விரைந்த அதிகாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரிக்கையில், அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த குகன் மற்றும் அவரது மனைவி சாரம்மாள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் குழந்தையை கடத்தி குழந்தையை விற்க முயன்றார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.