கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் என்ற வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் மனோஜ் (19) என்பவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார். அவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவரை அழைத்து கொண்டு பேரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம் தில்லை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அதனை இவர் இடது புறமாக முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் திடீரென சாலையில் சரிந்து விழுந்தது. அதில் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மனோஜ் மற்றும் ஆர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.