குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது சென்னையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சபீனா மற்றும் மகள்கள் சனா, யமீனா. இவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்கள். சபீனா பழனி மார்க்கெட் பகுதியில் பேக்கரி கடையை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சபீனாவின் தாய் இன்று தொலைபேசியில் அழைத்த பொழுது நீண்ட நேரமாகியும் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து பார்க்கச் சொன்னார். அக்கம்பக்கத்தினர் வீடு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது சபீனா தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கின்றார். மேலும் இரண்டு மகள்களும் படுக்கை அறையில் பிணமாக இருந்திருக்கின்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசார் விசாரணை செய்ததில் இரண்டு குழந்தைகளுக்கும் சபீனா விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.