கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் கூடமலை ஊராட்சி மேல வீதியில் வசித்துவருபவர் முருகேசன். இவருடைய மகள் 19 வயதுடைய ரோஜா. இவர் ஆத்தூரில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு ரோஜா தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலையாளியான கல்லூரி மாணவர் சாமிதுரை என்பதும், சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்ததும், ஒரு தலை காதலால் ரோஜாவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக ரோஜாவின் அக்காள் நந்தினி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டனர். இதற்கிடையே கொலையை நேரில் பார்த்த நந்தினியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காவல்துறையினரிடம் நந்தினி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். அதில் நான், எனது தந்தை முருகேசன், தாய் ஜெயா, தங்கை ரோஜா ,தம்பி விஜய் ஆகியோர் கூடமலை கடம்பூர் ரோட்டில் மலை அடிவாரத்தில் வசித்து வருகின்றோம். எங்களுடைய வீட்டின் அருகே விவசாய நிலம் இருக்கிறது. என்னுடைய தந்தை விவசாயம் செய்து எங்களை படிக்க வைக்கிறார்.
நான் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகின்றேன். என்னுடைய தங்கை ரோஜா ஆத்தூரில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். தம்பி விஜய் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கின்றார். எனக்கு வருகின்ற 13-ஆம் தேதி திங்கள்கிழமை திருமணம் நடக்க இருந்தது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில் என்னுடைய உறவினர்களுக்கு பெற்றோர் பத்திரிகை கொடுக்க சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் நான் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளேன்.
அப்போது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் இருந்து என்னுடைய தங்கை ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டது. நான் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். அப்போது எங்கள் ஊரை சேர்ந்த சின்னத்துரையின் உறவினர் சாமிதுரை என்பவர் அங்கிருந்து ஓடியதை பார்த்தேன். அதன்பின் என்னுடைய தங்கையின் அலறல் சத்தம் கேட்ட இடத்துக்கு சென்றேன். அங்கு அவள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் நான் கதறி அழுதேன். எனது அழுகை சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள்.
அதன்பின் ரோஜாவை மீட்டு கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டோம். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினார் என்று நந்தினி காவல்துறை மேலும் தெரிவித்தார். உடனே காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அதில் ஆத்தூர் தண்டவராயபுரம் பகுதியில் வசித்த ராமர் என்பவருடைய மகன் தான் சாமிதுரை என்பதும், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. அவரது பெரியப்பா சின்னத்துரை வீட்டிற்கு வந்து செல்கின்ற போது ரோஜா மீது காதல் ஏற்பட்டு கடந்த மூன்று வருடங்களாக அவரை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தன்னுடைய காதலை சாமிதுரை கூறினாலும் அதை ஏற்க ரோஜா மறுத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ரோஜா கல்லூரி செல்வதற்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சாமிதுரை அவரிடம் தன்னை காதலிக்க கூறி பிரச்சனை செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதேசமயம் கல்லூரி பேருந்து வந்ததும் ரோஜா அதில் ஏறி சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரோஜாவும் பெற்றோர் சாமித்துரையை கண்டித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மூன்று வருடங்களாக காதலித்து தனது காதலை ஏற்காத ரோஜாவே தீர்த்துக்கட்ட முடிவு செய்து தன்னுடைய நண்பர்கள் இரண்டு பேருடன் கூடமலைக்கு சென்றார். நண்பர்கள் சிறிது தூரம் நிற்க வைத்துவிட்டு அவர் மட்டும் ரோஜாவின் வீட்டிற்கு அருகில் மறைந்து இருந்தார். மாலையில் தோட்டத்துக்கு வந்த ரோஜாவிடம் தன்னுடைய காதலை ஏற்கும்படி வலியுறுத்தினார். அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ரோஜா மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். உடனே ரோஜா தந்திரமாக செயல்பட்டு அங்கு கிடந்த தோட்டத்திலுள்ள சேற்றில் விழுந்து புரண்டு உள்ளார்.
மேலும் கோபமடைந்த சாமிதுரை அங்கு கிடந்த கல்லை தூக்கி ரோஜாவின் தலையில் போட்டார். இதனால் படுகாயமடைந்த ரோஜா வலியால் அலறி துடித்தார். ரோஜாவின் அலறல் சத்தத்தை கேட்டு நந்தினி அங்கு ஓடி வந்துள்ளார். அப்போது சாமிதுரை அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அதனை நந்தினியை பார்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக கெங்கவல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை பிடிப்பதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சாமிதுரை பெரியப்பா, பெரியம்மா சுதா, சின்னதுரையின் மகன்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ரோஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதார்கள். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை கண் கலங்க வைத்தது. அதன் பின் உடல் கூட மலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.