கார்-பேருந்து மோதிய விபத்தில் 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தியாகராஜபுரம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி உள்ளார். இவர் பொன்மனையில் உள்ள கனரா வங்கியில் வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு யாழ்நிலா என்ற 1 வயது குழந்தை இருந்துள்ளது. மேலும் பிரேம்குமார் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் பிரேம்குமார் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையுடன் ராதாபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்தும் காரும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரும் அலறி துடித்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவர்களை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அவர்களை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே குழந்தை யாழ்நிலா பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து மற்ற 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.