மத கடவுளின் இறை தூதரை அவமானப்படுத்தியதற்காக சகோதரர்களுக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மத கடவுள்கள் குறித்து அவதூறு மற்றும் சர்ச்சை கருத்து தெரிவிப்பவர்களுக்கு சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. இந்த சட்டம் மூலம் இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதராக கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து அவதூறு மற்றும் சர்ச்சைக்கருத்து தெரிவித்தபலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகளும் உள்ளன.
இதனை அடுத்து பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணம் அமைந்துள்ள தலகங்க் சவுக்வால் பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சகோதரர்களான குவாய்சி ஆயுப் மற்றும் ஆமொன் ஆயுப் இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரை அவமதிக்கும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து சகோதாரர்கள் இருவரும் அந்த ஆண்டே பாகிஸ்தானை விட்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் சிங்கப்பூர், தாய்லாந்து என வெளிநாடுகளுக்கு சென்றபோதும் விசா கால அவகாசம் நீட்டிக்கப்படாததால் சகோதரர்கள் இருவரும் 2012-ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பி வந்துள்ளனர்.
பாகிஸ்தான் திரும்பிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்பு இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரை அவமதித்தாதாக சகோதரர்கள் இருவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த விசாரணையின் போது சகோதரர்களான குவாய்சி ஆயுப் மற்றும் ஆமொன் ஆயுப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருவருக்கும் மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மரண தண்டனையை எதிர்த்து சகோதரர்கள் லாகூர் ஐகோர்ட்டு ராவல்பெண்டி கிளை கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில், இந்த மேல்முறையீடு மீதான விசாரணை ராவல்பெண்டி கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில், இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதரை அவமதித்ததாக சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்த கோர்ட்டு, சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.