தமிழகத்தில் நியாய விலை கடை ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, ரேஷன் கடைக்கு தனித்துறை, பொட்டலமுறை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் இடையூறு ஏற்படாமல் மாற்று பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அரசு உறுதியாக உள்ளது. எனவே ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.