தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் “தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். செலுத்தாத நபர்களுக்கு வரும் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் முகாம்கள் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இந்தியாவில் 40 விழுக்காடு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
பிஏ4, பிஏ5, உருமாறிய புதிய பதிவானது 5-வது அலையாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நோய்தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனாலும் மக்கள் முக கவசம் அணிவது கிடையாது. அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பாசிட்டிவ் என்று வந்தால் கவலை வேண்டாம். மருத்துவமனையில் படுகைகள் தயார் நிலையில் உள்ளது. பலரும் வீட்டில் தனிமையில் உள்ளனர். பரிசோதனை செய்யாமல் பிறருக்கு பரப்ப வேண்டாம்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.