கொரோனா நோய்த்தொற்றை திறம்பட கட்டுப்படுத்த பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி போடுதல் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஐந்து கட்ட பார்முலாவை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைகாலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று சில மாநிலங்களில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலை அளிக்கிறது. எனவே , கொரோனா நோய்த்தொற்றை உடனடி மற்றும் திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் அதை கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி போடுதல் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஐந்து கட்ட பார்முலாவை பின்பற்றும் போது, சுகாதார அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது மரபணு வரிசை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.