மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டியாபுரம் அகதிகள் முகாமில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிமல்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிமல் அவரது நண்பர்களான நாகூர்கனி, சுதர்சன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெம்பக்கோட்டை அருகே இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சிவகாசியில் இருந்து வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நிமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாகூர் கனி மற்றும் சுதர்சன் ஆகிய 2 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநரான வேல்முருகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.