பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகசிபள்ளி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உறவினர்களான கோவிந்தன், முனியம்மாள் ஆகிய மூன்று பேரும் இணைந்து மோடிகுப்பம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நக்கல்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராஜ் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பவர்களிடம் தனக்கு பசிக்கிறது எனக்கு கூறி அவர்களிடம் சாப்பாடு வாங்கி தின்றுவிட்டு அங்கேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் கோவிந்தன், லட்சுமி, முனியம்மாள் ஆகிய 3 பேரும் வெவ்வேறு பகுதிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து திடீரென லட்சுமி அலறி சத்தம் போட்டதால் முனியம்மாளும், கோவிந்தனும் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது புதரில் உடல் முழுக்க வெட்டுக்காயங்களுடன் லட்சுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் லட்சுமி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு திம்மராஜ் தப்பி ஓடியது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருக்கும் திம்மராஜ் பிடிபட்டால் தான் கொலை செய்வதற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.