குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய இரண்டு பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி தளவாய்புரத்தில் வசித்த குழந்தை துரை என்பவருடைய மகன் 27 வயதுடைய ஜெபசிங். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க நகர் 3வது தெருவில் வசித்த சண்முகசுந்தரம் என்பவருடைய மகன் 23 வயதுடைய மாரிமுத்து. தூத்துக்குடி மூன்றாவது மைல் பசும்பொன் நகரில் வசித்த காளி பாண்டியன் என்பவருடைய மகன் மற்றொரு 23 வயதுடைய மாரிமுத்து ஆகியோரை சந்தித்துள்ளார்கள். 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது.
இவர்கள் ஜெயிலில் இருக்கின்ற போது ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களாகி உள்ளார்கள். இரவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபின் தூத்துக்குடி மூன்றாவது மைல் ரயில்வே பாலத்திற்கு கீழே தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மீளவிட்டான் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தார்கள். அதன் பின் குடிபோதையில் 3 பேரும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கி விட்டார்கள். மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து இரண்டு பேரும் தண்டவாளத்தின் குறுக்காக படுத்தினார்கள். ஜெபசிங் தண்டவாளத்தில் நடுவில் நீளவாக்கில் படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து லோடு ஏற்றிய சரக்கு ரயில் ஆந்திரா மாநில நூஸ்வித் ரயில் நிலையத்திற்கு கிளம்பி சென்றது. அந்த ரயில் தூத்துக்குடி 3வது மெயின் ரயில்வே பாலம் பகுதியில் செல்லும் போது அங்கு தண்டவாளத்தில் தூங்கிய மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து ஜெபசிங் 3 பேர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தண்டவாளத்தில் குறுக்கே படுத்த மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து இரண்டு பேரும் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
தண்டவாளத்தின் நடுவில் நீளவாக்கில் தூங்கிய ஜெபசிங் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். தனது நண்பர்கள் இரண்டு பேரும் ரயிலில் அடிபட்டு இறந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்த ஜெபசிங் பக்கத்து தெருவுக்கு சென்று நண்பர்களிடம் கூறினார். இதனை அடுத்து ஜெபசிங்கே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் மோதி இறந்த இரண்டு பேரும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் மோதி இறந்த மாரிமுத்து மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி நிலையில் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதைபோன்று மற்றொரு மாரிமுத்து மீது வழிப்பறி வழக்குகள், ஜெபசிங் மீது கொலை வழக்கு பதிவாகி இருப்பதாக போலீஸ் காவல் துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.