வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் ஐந்து மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் அடுத்துள்ள இடையன்சாத்து பகுதியில் வசித்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு நேற்று புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் வேலூர் தாலுகா காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசித்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவிக்கும், திருவண்ணாமலையில் வசித்த 27 வயதுடைய வாலிபருக்கும் இன்று வெள்ளிக்கிழமை மணமகன் வீட்டில் வைத்து திருமணம் நடக்க இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதைபோன்று அணைக்கட்டு தாலுக்கா பாட்டை ஊரில் வசித்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு வருகின்ற 13 ஆம் தேதி அதே பகுதியில் வசித்த 24 வயதுடைய வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாணவிகளின் பெற்றோரிடமும் பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு பேரும் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் 5 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.