ஆடுதொட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்கின்ற பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவண்ணாமலை, சித்தூர் செல்லும் பேருந்துகள் வேலூர் கோட்டை அருகில் ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்தும் மற்ற பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு உள்ளன. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டும் புதிய பேருந்து நிலையத்தில் செல்லியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியிலிருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. இதனால் வருகின்ற 21 ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கின்றார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருத்தணி, ராணிப்பேட்டை மார்க்கமாக செல்கின்ற தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் புதிய மீன் மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றது. ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட திருவண்ணாமலை, சித்தூர் வழித்தட பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் இந்த பகுதியில் நேற்று இரவு முதல் வெறிச்சோடி உள்ளது. ஆனாலும் ஒரு சில பயணிகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்தார்கள்.
அதன்பின் அவர்கள் ஆடுதொட்டி பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு சென்றுள்ளார்கள். புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரோடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலையம் திறக்கும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது. இதனால் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து ஏமாற வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.