கோவில் நிலத்தை ஏலம் விடப்பட்டபோது அதிமுக-திமுக பிரமுகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேராம்பட்டு கிராமத்தில் சுப்ரமணிய கோவில் உள்ள நிலையில் கோவிலுக்கு சொந்தமாக நன்செய் புன்செய் நிலங்கள் 200 ஏக்கர் இருக்கின்றது. இந்த நிலங்களின் குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 60 ஏக்கர் நிலம் மட்டும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே எஸ் அன்பழகன் தலைமையில் ஏலம் விடப்பட்டது.
ஏலம் விடப்பட்ட போது அதிமுக பிரமுகர் சாமிநாதனுக்கு திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.தணிகாசலத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலமானது சென்ற முறை 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இந்நிலையில் தற்போது 2 லட்சத்து 16 ஆயிரம் வரை ஏறும் கேட்கப்பட்டது. ஏலத்தின் போது சாமிநாதனின் மகன் அன்பு மற்றும் ராஜாமணி உள்ளிட்டோர் தணிகாசலம் இனிமேல் ஏலம் கேட்க வேண்டாம் என கூறிய போதிலும் அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தணிகாசலத்தை அடிக்க முன் வந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை குலோத்துங்கன், திமுகவினர், ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினார்கள். இறுதியில் 60 ஏக்கர் நிலம் ரூபாய் 4 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் போனது. கோவிலுக்கு சொந்தமாக 200 ஏக்கர் நிலம் இருந்தபோதிலும் கோவில் சேதமடைந்து காணப்படுகின்றது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.