திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் குட்டிமணியகாரனூரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கர் திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பிரியதர்ஷினி திருச்சிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியதர்ஷினி கணவர் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.