தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எடை மெஷின் போன்ற டிஜிட்டல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் வரிசையில் காத்திருப்பது என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு விரைவில் ஒரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதற்கு தகுதியானவர்கள் இனி கடைக்கு செல்ல தேவையில்லை. மாநில உணவு மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார். இந்த புதிய வசதியின் மூலமாக ஏடிஎம் மிஷின் மூலமாகவே உணவுப் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்தத் திட்டம் கூடிய விரைவில் முன்னோடித் திட்டமாக சில மாவட்டங்களில் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நமக்கு தேவையான போது ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது போல தகுதியானவர்கள் உணவு தானியங்களை ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டம் ஒரிசா மற்றும் அரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் இனி மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதே போல எடை எடை மிஷின்கள் மோசடி நடைபெறுவது மற்றும் உணவு தானியங்கள் குறைவாக வழங்கப்படுவது உள்ளிட்ட புகார்கள் இருக்காத. இந்த திட்டம் விரைவில் தமிழகத்துக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.