திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு அன்றாடம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் டோக்கன்களை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் 3 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில்இலவச டோக்கன்கள் மீண்டும் எப்போதும் போல வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இலவச தரிசன டோக்கன்களை பெறுவதற்கு முறையான வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து கோடை காலத்திற்கு பிறகு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் தேவஸ்தானம் சார்பாக இலவச திருமணம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.