பள்ளிகளுக்கான மாதிரி வேலை, நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
புதிய கல்வியாண்டில் பள்ளிகள் வேலை, நேரம் மற்றும் தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகள் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும். வாரம் ஒருநாள் நீதி போதனை பாட வேளையில் மனநல ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும்.
அதற்கு முன்பு பெற்றோர் கூட்டம் நடத்தி குழந்தைகளின் கல்வி செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலை 9.10 முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதேபோல் 11, 12-ம் வகுப்புகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 30 நிமிடம் காலை வணக்கம் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். எனினும் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு வகுப்புகள் தொடங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம். வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.