தமிழகத்தில்கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 1450 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். மாணவர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் முடிந்த பிறகு சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தங்கிப் படித்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். மேலும், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றவர்கள் விடுமுறை முடிந்துவிட்டதால், சென்னைக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். இன்று இரவு அதிகப்படியானோர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சுமார் 250 கூடுதல் பேருந்துகளை பல்வேறு இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.