நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களை பின்னுக்குத்தள்ளி கோவை வளர்ச்சியில் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அதன் பிறகு தொற்று குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் டயர் 2 எனப்படும் இரண்டாம் நிலை நகரங்களில் பொருளாதாரம் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து MEI எனப்படும் Monster Employment Index என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த மே மாதம் 2022 நிலவரப்படி வேலை வாய்ப்பு அளிப்பதில் 27 சதவீத வருடாந்திர வளர்ச்சியை கோவை மாநகரம் பெற்று முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மும்பை 26 சதவிகிதமும், டெல்லி ஹைதராபாத் ஆகியவை 16 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. சென்னை 15 சதவீதமும், புனே 13 சதவீதமும், அகமதாபாத் 12%, பெங்களூரு 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் கடந்த செப்டம்பர் 2021 முதல் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் துறை மீண்டு வர பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. பயணம் மற்றும் சுற்றுலா துறைகள் முழுவதும் மீண்டு வந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவை நடப்பாண்டில் 29 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மெட்ரோ நகரமான சென்னைக்கு அடுத்தபடியாக டயர் 2 எனப்படும் இரண்டாம் நிலை நகரங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, ஓசூர் ஆகியவற்றில் மனிதவள மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. வரும் காலங்களில் இந்த நகரங்கள் அனைத்தும் சிறப்பான வளர்ச்சியடையும் என்று கூறப்படுகிறது.