மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். கடந்த 9-ஆம் தேதி விஜயகுமார் வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் விஜயகுமாருக்கு காயம் எதுவும் ஏற்படாததால் பத்மா அவரை அறையில் படுக்க வைத்துள்ளார்.
இதனையடுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது வலி அதிகமானதால் பத்மா உறவினர்களின் உதவியுடன் விஜயகுமாரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக விஜயகுமாரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.