இங்கிலாந்தில் 650 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு நகர் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷைர் நகரத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கும் ரேவன்சர் ஓ நகரானது 13 ஆம் நூற்றாண்டினுடைய ஆரம்பத்தில் சரக்கு கப்பல்களையும், மீன்பிடி படகுகளையும் நிறுத்தக் கூடிய பெரிய நகராக விளங்கியது. அங்கிருந்த கடலோர பகுதியில் அந்த சமயத்தில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் அமைந்திருந்தன.
இதனிடையே 13 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அந்நகரத்தை கடல் மூழ்கடித்தது. எனவே, இத்தனை நூற்றாண்டுகளாக அந்த நகர் கடலுக்குள் தான் மூழ்கிக் கிடந்தது. சுமார் 650 வருடங்களாக இந்த நகரை யாராலும் பார்க்க முடியவில்லை. பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் அந்த நகரம் இருக்கும் இருப்பிடம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட தேடுதலில் நீரின் மேற்பரப்பில் சில மீட்டர்கள் பாறைகளாலும், கற்களாலும் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் தென்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வரை ஆய்வாளர்கள் பிற இடங்களில் அதனை தேடிக் கொண்டிருந்தனர். எனவே, பல நூற்றாண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்துவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்விற்காக ஹல் பல்கலைக்கழக புவி அறிவியல் ஆய்வாளர் டான் பார்சன்ஸ் தன் வாழ்நாளில் 25 வருடங்களை செலவிட்டிருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் இது கண்டுபிடிக்கப்பட்டது, வாழ்விலேயே மிகப்பெரிய பணி நிறைவடைந்தது போல இருக்கிறது. எனவே மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.