காதலை ஏற்க மறுத்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கடலாடி பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனையடுத்து மேல்பாலூர் கிராமத்தில் வசிக்கும் தமிழ்வாணன் என்பவர் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் தமிழ்வாணன் அடிக்கடி மாணவியிடம் தன் காதலை ஏற்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தமிழ்வாணன் வீட்டிற்குள் புகுந்து தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன் மாணவியை கன்னத்தில் அறைந்துவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து மாணவி கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.