கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டிஜிபி ஆபரேஷன் கந்துவட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் கந்துவட்டி சம்பந்தமான மனு இடம் பெறும் முகாம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக மகாராஜகடை போலீஸ் நிலைய எல்லையில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி எனும் நபர் உரிய ஆவணங்களுடன் போலீஸ் நிலையத்தில் சென்று நேற்று புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் பெரியபனமுட்லு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் சிங் என்பவரின் மீது மகாராஜகடை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவிந்தன் வீட்டில் சோதனை செய்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் அதன் நகலை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாராவது கந்து வட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டிருக்கின்றது.