கேட்பாரற்று கிடக்கும் சாமி சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் டவுனில் உள்ள புகழ்பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென பாலாலயம் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் சுகவனேஸ்வரர் சன்னதியில் இருக்கும் துவார பாலகர்கள் சிலை அகற்றப்படாமல் துணி போர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சொர்ணாம்பிகை சன்னதியில் இருக்கும் துவார பாலகிகளின் சிலைகளை அகற்றி துணியால் மறைத்து கீழே வைத்துள்ளனர். இந்த கற்சிலைகள் வெயிலிலும், மழையிலும் கேட்பாரற்று கிடப்பதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே துணியால் மூடிக் கிடக்கும் சாமி சிலைகளை உரிய முறையில் பாதுகாக்க கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.