தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம் போன்றவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 8 பாட வேளையாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்புகள் நடத்தத் திட்டமிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த முதல் 5 நாட்களுக்கு மாணவர்களுக்கு நல்லொழுக்க பாடம் எடுக்கப்பட வேண்டும்.
பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உடன் கலந்து ஆலோசனை செய்து பள்ளி திறக்கும் முடியும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக வைத்துக் கொள்ள யோகா பயிற்சி மிக அவசியம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வயது முதிர்ந்த காலத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். எனவே அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் .