மின்சார வாரிய தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்திற்கு 500 மெகாவாட் எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்கான ஏலம் கைவிடப்பட்டது. இந்த ஏலம் கைவிடப்பட்ட ஒரே நாளில் மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது 500 மெகாவாட் எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மின் வாரிய தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் தன்னிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என தனக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது தனி நிறுவனத்திற்கோ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சொல்லுவதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இலங்கையில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மெகாவாட் மின் திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என அதிபர் விரும்புகிறார். இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையற்ற செல்வாக்குகள் எதுவும் பயன்படுத்தப்படாது. இந்த திட்டங்களுக்கான முன்மொழிவுகள் குறைவாக இருக்கும் பட்சத்தில், திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இது இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என அதிபர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்திற்கு மின்வாரிய திட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 500 மெகாவாட் மின்வாரிய திட்டத்திற்கான ஏலம் கைவிடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதேப்போன்று பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கைக்கும் சென்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் மின் வாரிய தலைவர் எம்எம்எஸ் பெர்டினாண்டோ அதிபர் கோத்தபய ராஜபக்சே பற்றிக் கூறியது பொய்யானவை என்றும், உணர்ச்சிவசப்பட்டு கூறியதாகவும் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் திடீரென மின் வாரிய தலைவர் எம்எம்எஸ் பெர்டினாண்டோ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் மின் வாரிய புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.