குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது அனைவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சியானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றததையடுத்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது, வளர்ந்துவரும் நாடுகளில் அதிகமாக குழந்தை தொழிலாளர் முறை இருக்கின்றது. ஆகையால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை முறை உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றது.
மேலும் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். இதனால் வறுமை அதிகரிக்கின்றது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. மேலும் 14 முதல் 18 வயதுள்ள இளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்த கூடாது. இது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு அவர்களை ஈடுபடுத்தினால் ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதமும் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும்.
குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அவ்வாறு உள்ள குழந்தை தொழிலாளர்கள் பற்றி தகவல் தெரிவிக்க சைல்டு ஹெல்ப்லைன் நம்பரான 1098 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிப்பதே நம் அனைவரின் கடமையாகும் என அவர் பேசினார்.