ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் பாண்டிங் தலைமையிலான அணியும், வார்னே தலைமையிலான அணியும் ஆடவுள்ளன.
இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹேடின், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ர், யுவராஜ் சிங், ஷேன் வாட்சன், வாசிம் அக்ரம் என ஏராளமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
இதில் பாண்டிங் அணிக்கு இந்திய லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும், வார்னே அணிக்கு கார்ட்னி வால்ஷ் பயிற்சியாளராகவும் முன்வந்தனர். தற்போது இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா அறிவித்துள்ளார்.
ஏராளமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவிருக்கும் கிரிக்கெட் போட்டி பிக் பாஷ் தொடரின் இறுதிப் போட்டி நாளன்று நடக்கவுள்ளது. இதனால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.