சென்னை மாவட்ட ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மவுண்ட் பாலாஜி மருத்துவமனை அருகே உள்ள ஜிஎஸ்டி சாலை உள் செல்லும் சாலையில் பின்னர் வெளி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் வாகனப் போக்குவரத்தை மாற்று பாதையில் செல்லும் பரிசோதனை அடிப்படையில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
அதன்பிறகு நேரடி பணி ஜூன் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திருவிகா தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம். அதனைப்போலவே பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதுவும் இல்லாமல் வழக்கமான சாலையில் செல்லலாம்.
வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதுமில்லாமல் வழக்கமான சாலையில் செல்லலாம். கத்திப்பாரா சர்வீஸ் சாலை வேலை நடைபெறும் போது வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் சிப்பெட்சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திருவிக தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.