அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அ.தி.மு.க குழுவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.கவின் பொது அவைத் தலைவரை தேர்வு செய்வது, ஜனாதிபதி தேர்தல், பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டமானது தற்போது ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கட்சியின் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் நடைபெறும் விவாதங்கள், எடுக்கப்படும் முடிவுகள் போன்றவைகள் வெளியே கசிவது தற்போது அதிகமாகியுள்ளது. இதை தடுக்கும் விதமாக ஆலோசனைக் கூட்டத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அ.தி.மு.க கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒரு சிலர் தங்களுடைய செல்போனை ஆன் செய்து வைப்பதால் வெளியே இருக்கும் சிலர் அதை ஒட்டு கேட்டு சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் அதை வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாகத்தான் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் எம்.பி மைத்திரியேனிடம் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கூறியதால், அவர் ஆத்திரத்தில் கூட்டத்தை புறக்கணித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இப்படி கட்சியின் தலைமை நிர்வாகம் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.