ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்த பயணிகளும் இணையதளம் வாயிலாக ரயில் நிலையத்தை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை விரைவு ரயிலில் பயணிக்க இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ரயில் புறப்பட நான்கு மணி நேரத்திற்கு முன்பே அதாவது ரயில் சார்ட் தயாரிப்பதற்கு முன்பே தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை ஐஆர்சிடிசி என்ற இணையதளம் மூலமாக அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாற்றிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும். சில தவிர்க்க முடியாத தருணங்களில் பயணிகள் தங்கள் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் போகும்போது இந்த வசதி அவர்களுக்கு உதவியாக இருக்கும். ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்த பயணிகள் ரயில் புறப்பட நான்கு மணி நேரத்திற்கு முன்பாக www.irctc.co.in என்ற இணையதளத்திற்கு சென்று அங்கே மெயின் மெனுவுக்குக் கீழே இருக்கும் மோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் கவுண்டர் டிக்கெட் போர்டிங் பாயின்ட் சேஞ்ச் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய அளிக்கப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து பின்னர் ஓடிபி பதிவிட்டால் உங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்ட இடத்தை மாற்றும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இதனால் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை விட்டுவிட்டால் அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படாது. இந்த வசதி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு 2019ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது ரயில் நிலையங்களில் எடுத்த ரயில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.