ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மாதந்தோறும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 2 ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் மாலை வரை ஆதார் மையம் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.