அமெரிக்காவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு வயது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டி பிரபல அமெரிக்க ஊடகம் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதனால் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜோ பைடன் வயது ஒரு சிக்கலை ஏற்படுத்தும் என்ற கூற்றுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ள வெள்ளை மாளிகை அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி படுத்தி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜின்- பியர் கூறியது- 2024 ஆம் ஆண்டு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி திரும்ப திரும்ப கூறி வருகிறார். அதற்கு அர்த்தம் என்னவென்றால் அவருக்கு வயது ஒரு பிரச்சனை அல்ல. அமெரிக்க மக்களின் நலனுக்காக உழைப்பதும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுமே அவரின் முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.