கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மேற்கு மண்டலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல திட்டங்களை வரிசையாக செயல்படுத்தி வருகின்றனர். ஸ்டாலின், அமைச்சர்கள் என வரிசையாக சென்ற பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் கட்சியின் தலைமையை பெரிதளவில் ஈர்த்துள்ளது.
எனவே அவர் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அச்சாரம் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கோவையில் களப்பணி மேற்கொண்டு வருகின்றார். இன்று அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக கோவையில் குடிநீர் வினியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறித்து விவாதம் செய்யப்பட்டது .மேலும் கோவையை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்க திமுக அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.