ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலைவசதி அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தங்கள் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்கு செல்வதற்கான பாதை முறையாக இல்லை. குண்டும் குழியுமாக உள்ள பாதையில் செல்வதால் சில நேரங்களில் பிரேதங்கள் தவறி விழுந்து விடுகின்றது.
அந்த வழியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய நிலை நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலங்கள் பெரும்பாலும் மற்ற சாதியினருக்கு சொந்தமானது என்பதால் அதில் இறங்கி செல்லும் போது சட்ட ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே முறையான சாலை வசதியை அமைத்து தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார் . இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி நீதிபதி என் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இதுகுறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.