தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 3 விசாரணைக் கைதிகள் காவல்நிலையங்களில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகள் உயிரிழப்புக்கு காவல்துறை தரப்பில் இருந்து கைதிகளின் உடல்நிலை குறைவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் கைதிகளின் உறவினர்கள் காவலர்கள் அடித்து கொலை செய்ததாக புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் லாக் அப் மரணங்களை தடுக்கும் விதமாக டிஜிபி அலுவலகத்திலிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவரின் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும். காவலில் வைக்கப்படுவதற்கு முன்னதாக மருத்துவ பரிசோதனைக்கு தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செயல்பட வேண்டும். சோதனை இல்லாமல் தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறையை நிறுத்தி கொள்ள வேண்டும். காவல் நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலை ஆகியவற்றில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்ய வேண்டும்.
சந்தேக நபர்களை பொதுமக்கள் அடிக்கும் பொழுது அவரை சம்பவ இடத்தில் இருந்து நேரடியாக ஆம்புலன்ஸ் அல்லது பிற தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களை காவல் நிலையத்திற்குள் கொண்டுவரவோ போலீஸ் காவலில் எடுக்கவோ கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக காவல் நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களை கொண்டு வரக்கூடாது. அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு சரியாக வேலை செய்வது உறுதி செய்து கொள்ளவும்.