அமெரிக்க நாட்டில் ஒரு நபர் மிகப்பெரிய திமிங்கலத்தால் விழுங்கப்பட்ட நிலையில் 40 நொடிகள் அதன் வயிற்றில் இருந்துவிட்டு பின் உயிருடன் மீண்டு வந்திருக்கிறார்.
அமெரிக்க நாட்டில் மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் மைக்கேல் பேக்கார்ட் என்னும் 56 வயதுடைய நபர் தன் குழுவினருடன் ஆழ்கடல் பகுதியில் இறால், கடல் நண்டுகளை சேகரிப்பவர். எனவே, வழக்கம்போல் ஆழ்கடலுக்குள் நீந்தி சென்றிருக்கிறார். அதன்பிறகு, மிகப்பெரிய திமிங்கலம் அவரை விழுங்கியதாக கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ஆழ்கடலில் கீழ் சென்ற போது நீரில் 45 அடிக்கு கீழ் இருந்தேன். அப்போது, என்னை ஏதோ உள்ளிழுத்தது. மேலே வர முயன்றபோது எழும்ப முடியாமல் போனது. அந்த இடமே கருப்பாக தெரிந்தது. அப்போது தான் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்ததை உணர்ந்தேன்.
அந்த திமிங்கலம் அதிக வெறியுடன் இருந்தது. உயிரிழக்க போகிறேன் என்று நினைத்தேன். என் மனைவியையும், பிள்ளைகளையும் நினைத்து பார்த்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த திமிங்கலம் கடலின் மேற்பரப்பிற்கு சென்று தலையை அசைத்தது. உடனே அதன் வாயில் இருந்து வெளியேறி பறந்து வந்து விழுந்தேன்.
திமிங்கிலத்தின் வாய்க்குள் நான் இருந்த சமயத்தில் நுரையீரல் வெடிக்காததால் உயிர் பிழைத்தேன் என்று கூறியிருக்கிறார். அதன் பின், அவரின் குழுவினர் அவரை மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர்.