மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு மாலா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மனைவியுடன் சிறுவாபுரி இருக்கும் முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது கும்மிடிப்பூண்டியில் இருந்து எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மனோகரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் லேசான காயங்களுடன் மனோகரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.