குடும்ப பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல் நேற்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாலமுருகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் பாலமுருகன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு புளியமரத்தில் பாலமுருகன் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாலமுருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.